தேசத்துரோகம் மற்றும் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டதற்காக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் இருவரும் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் மீதும் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்நிலையத்தில் வழக்கு (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூன்று முறை சகோதரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பபட்டது. இந்நிலையில் பாந்த்ரா காவல்நிலையத்தில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது போன்று, அவர்கள் வலைத்தளங்களிலோ அல்லது மின்னனு ஊடகத்திலோ கருத்து எதுவும் சொல்லவில்லை” என வாதாடினார்.
இதனையடுத்து, கங்கனாவும், ரங்கோலியும் பந்த்ரா காவல் நிலையத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மேலும் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடையும் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.