நடிகர் பாபி சிம்ஹாவுக்கு இனிமேல் சினிமா வாய்ப்பு தரப்போவதில்லை என்று ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் அக்னி தேவி. அரசியல் சார்ந்த இப்படத்தை ஜே.ஆர்.ஆர் மற்றும் ஸ்டாலினின் ஜெய் பிலிம் புரொடக்சன்ஸ் மற்றும் சீயோடா ஸ்டுடியோஸ் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பாபி சிம்ஹா இயக்குனர் ஜான் பால்ராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பல இடங்களில் என் முகத்தை மார்ஃபிங் செய்துள்ளனர், டிரெய்லரில் வந்த குரலும் தன்னுடையதில்லை என கூறியிருந்தார் பாபி சிம்ஹா .
மேலும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் வரை, படத்தை வெளியிடக்கூடாது என படத்திற்கு தடை வாங்கியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாபி சிம்ஹா கூறியிருந்த நிலையில், கடந்த 23ம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஜான் பால்ராஜ், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தும் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தயாரிப்பாளர் சங்கத்தையும் தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது..
இதன் காரணமாக நேற்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், இனிமேல் பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரமாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது கடினமான ஒன்று. இதில் படத்தை எடுக்கும் தயாரிப்பாளரிடமிருந்து நடிப்பதற்கு காசு வாங்கிக் கொண்டு, அப்படத்தில் நடிக்கும் நடிகரே படத்தை வெளியிட விடாமல் தடை வாங்குவது குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பாபி சிம்ஹாவால், அக்னி தேவி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். தயாரிப்பாளரது கஷ்டம் என்ன என்று புரியாமல், பொய் புகார் கொடுத்த நடிகர் பாபி சிம்ஹா இனிமேல் எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி, அவருக்கு சினிமா வாய்ப்பு தரமாட்டோம் என்று பலரும் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.