தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான போட்டியில் 57,778 பேர் போட்டியிடவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 28.01.2022 முதல் இறுதி நாளான 04.02.2022 வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறையை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சியில் மொத்தம் 2,062 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். 218 பதவியிடங்களுக்கு 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி வார்டு 8-ல் பதவியிடத்திற்கு வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மொத்தம் 12,607 பதவியிடங்களுக்கு மொத்தம் 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்” என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.