தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.எல் அழகப்பன், ரித்தீஸ், எஸ்வி சேகர் போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டம் செய்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக சங்க தலைவர் விஷாலை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நான் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான் செய்தேன். நல்லது செய்வது முறைகேடு என்றால் நான் முறைகேடுதான் செய்கிறேன்” என கடுமையாக கூறினார். இதனிடையே தயரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்த ஜனவரி 2 ம் தேதி அழைப்பு விடப்பட்டது. இதற்கு எதிராக விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி விஷாலிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

விஷாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், “நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி. தோழர். நடிகர் விஷால் அவர்களுக்கு நீதி கிடைத்ததற்காக…” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சரத்குமாரும், நடிகை ராதிகாவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் விழாவில் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நான் சங்கத்தில் பதவி வகித்த போது என் மீது 150 கோடி வரை ஊழல் சொன்னார்கள். அதன்பிறகு 150 கோடி 3 லட்சமானது. இப்போது அதே குற்றச்சாட்டை அவர்கள் சந்திக்கிறார்கள். அதை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார் சரத்குமார்.

மேலும் ராதிகா சரத்குமார் கூறுகையில், “விஷால் பொறுப்பேற்ற பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை கருத்தில் கொண்டு அறக்கட்டளை நிதியை எடுத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுத்திருக்கிறார். அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றார்.