சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதனால் சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று (15.01.2023) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர்.

இதனையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (1), குசால் மெண்டிஸ் (4), நுவனிது பெர்னாண்டோ (19) ஆகியோர் சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சனகா(11) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது. இப்போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இன்னிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்துள்ளார்.