இலங்கையில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
 
அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
 
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தின தாக்குதல்களைப் போன்று மேலும் பல தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் ஹெவளியாகின.
 
இதையடுத்து, பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர்.
 
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதல் குறித்து, காவல் துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா சனிக்கிழமை கூறியதாவது:
 
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கல்முனை நகரில் உள்ள வீடு ஒன்றில், ஈஸ்டர் பண்டிகை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து, இலங்கை ராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டை நெருங்கினர். அப்போது, வீட்டில் பதுங்கியிருந்தவர்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் சிக்கி, உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். வீட்டுக்குள் பதுங்கியிருந்தவர்கள், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்து கொண்டனர்.
 
குண்டுவெடிப்புக்குப் பிறகு, அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
 
அவர்களில் 3 பேர் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே, சாய்ந்தமருது பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார்.
 
அந்த இடத்தில் இருந்து “டி56′ ரக துப்பாக்கி, டெட்டனேட்டர், தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ராணுவ சீருடை, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
 
இந்தச் சம்பவங்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் கல்முனை, சாவல்கடே, சம்மாந்துறை ஆகிய இடங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
இதனிடையே, பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஓயும்வரை, பயங்கவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 130 பேர் இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார். ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
 
 
முன்னதாக இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினமான கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர்.
 
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 
இந்தச் சம்பவங்களில் உள்ளூர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
 
76 பேர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.