கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதிஉச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீர் ஆய்வு மனுதாக்கல் செய்ய போவதில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் தேவசம்போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதனை கொஞ்சமும் எதிர்பாரதா சங் பரிவார் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தூண்டிய வண்ணம் உள்ளனர் .மேலும் கேரளவில் பாரதீய ஜனதாவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனிதுரா, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருனாக்கரா ஆகிய இடங்களில் நேற்று ஐய்யப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள்.தில்லியிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் கலந்து கொள்ளுமாறு ஐய்யப்பன் கோவிலின் தலைமை தந்திரிகள் மற்றும் கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று தலைமை தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷியாலாஜா விஜயன் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து உள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜையின் போது பெண் ஊழியர்களை பணியமர்த்தப் போவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் வாசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கூடுதலாக பெண் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.