ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்…3 நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் விசாரணை
புதுடெல்லி:

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக, இன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், வரும் புதன்கிழமை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய பாஜ அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததில் ஊழல் நடந்துள்ளது எனக்கூறி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஊழல் ஏதும் நடக்கவில்லை என பாஜ கட்சி கூறிவருகிறது.

இந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய தலைமைக் கணக்கு தணிக்கைத்துறை தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கடந்த 4ம் தேதி மனு அளித்தனர்.

அதில், “ரபேல் போர் விமான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதான விவரங்கள், தகவல்கள் வெளியே வருகின்றன. ஆனால், அதுகுறித்து எந்தக் கேள்விகள் எழுப்பினாலும் பாதுகாப்பு துறையிடம் இருந்து எந்தவித பதில்களும் இல்லை.மத்திய பாஜ அரசு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக, அரசுக்கு ரூ.41 ஆயிரத்து 205 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து விமானங்களும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்குப் பரிமாறப்படவில்லை. ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மூலம் தனியார் நிறுவனமான ரிலையன்சுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் அரசு இதே ஒப்பந்தத்தை மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனத்துக்க்கு அளித்திருந்தோம். அந்த ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடியும், அவரின் அரசும் ரத்து செய்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் சிஏஜி அதிகாரி ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 18ம் தேதி ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியைச் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவர், இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எஸ்.ஜோசப் அமர்வு முன், பிரான்ஸ் – இந்தியா இடையே ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை மறுநாள் (அக். 10) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ), தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி காலத்தில், இந்தியா – பிரான்ஸ் இடையே போடப்பட்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை மூடிய உறையில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திடிர் முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது . தேர்தல் நேரத்தில் அரசுக்கு ரூ.41 ஆயிரத்து 205 கோடி இழப்பு என்பது பாஜக அரசை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.