தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள முன்ஏற்பாடுகள் குறித்தும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) கடந்த புதன்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினேன்.
 
அப்போது, சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்தவர்கள் பற்றிய விவரம் கேட்டறிந்தேன். இந்த விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் டேட்டா எண்ட்ரி செய்யும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.
 
கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தவர்களுக்கு விரைவில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
 
மேலும், தற்போது இருப்பிடம் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அவர்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை காட்டி ஓட்டு அளிக்க முடியும்.
 
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு சின்னத்துக்கு வாக்களித்தால், குறிப்பிட்ட ஒரு சின்னத்தில்தான் வாக்கு பதிவாகிறது என்று புகார் எழுந்ததால்தான், நீதிமன்ற உத்தரவையடுத்து அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் (விவிபேட்) இந்த மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.
 
இந்த இயந்திரத்தில், வாக்காளர் வாக்களித்ததும் அந்த இயந்திரத்தில் உள்ள பாக்ஸில் ஒரு துண்டு சீட்டு தெரியும். அந்த துண்டு சீட்டு 7 விநாடிகள் மட்டுமே தெரியும்.
 
அப்போது, வாக்காளர்கள் யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த துண்டு சீட்டை கையில் எடுக்க முடியாது.
 
உதாரணத்துக்கு, ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பாக்சில் வேறு சின்னம் தெரிந்தால் ஓட்டுப்பதிவு அதிகாரியிடம் உடனே புகார் அளிக்கலாம்.
 
உடனே ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு அதிகாரி ஒரு மாதிரி ஓட்டுப்போட்டு சோதனை செய்வார். அப்படி சோதனை செய்தபோது, வாக்காளர் பொய்யான புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் வாக்கு எண்ணிக்கையின்போது, ஓட்டுப்பதிவு அதிகாரி போட்ட ஓட்டு மைனஸ் செய்யப்படும்.
 
அதன்படி, தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது பற்றி பொய்யான புகார் அளித்தால் அந்த வாக்காளர் மீது இந்திய தண்டனை சட்டம் 177 பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்படும்.
 
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ₹1000 அபராதம் விதிக்கப்படும். இரண்டும் சேர்ந்தும் தண்டனை விதிக்கப்படலாம்.
 
தமிழகத்தில் 30 ஆயிரம் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வெப் கேமரா வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர் மற்றும் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படும்.
 
கடந்த முறை 26 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. தேர்தல் தொடர்பான புகாரை 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
 
இதுவரை 27,775 பேர் இந்த எண்ணுக்கு போன் செய்துள்ளனர். இதில் 2,456 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 947 புகார்கள் இன்னும் விசாரணையில் உள்ளது. பெரும்பாலானவர்கள் போன் செய்யும்போது, ஓட்டுச்சாவடி எங்கு உள்ளது என்பது போன்ற சந்தேகங்களை கேட்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.