வாக்காளர் ஒப்புகை சீட்டுகளில் ( VVPAT)  50 சதவீதத்தை எண்ணுவதற்கு, தேர்தல் முடிவு வெளியாவதில் 6 நாட்கள் தாமதமானால் கூட பரவாயில்லை’’ என உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் கூறியுள்ளன.
 
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (திங்கள் ) விசாரணைக்கு வருகிறது.
 
தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதெல்லாம், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் மீது பலரும் குறை கூறி வந்தன. இதனால் வாக்காளர்களின் சந்தேகத்தை போக்குவதற்கு வாக்காளர் ஒப்புகை சீட்டு என்ற விவிபிஏடி இயந்திரமும் தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படுகின்றன.
 
ஓட்டு போட்டபின், விவிபிஏடி இயந்திரத்தில் வெளிவரும் சீட்டில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். பதிவான ஓட்டுக்களுடன், வாக்காளர் ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கை ஒத்துப் போகிறதா என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது.
 
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீத விவிபிஏடி சீட்டுகளை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட   21 எதிர்கட்சி தலைவர்கள் மனு செய்தனர்.
 
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘‘50 சதவீத வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவுகள் வெளியிட 6 நாட்கள் தாமதம் ஏற்படும். மேலும், விவிபிஏடி சீட்டுகள் எண்ணுவதை அதிகரிப்பதற்கு, தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். ஆதனால் 0.4 சதவீத ஒப்புகை சீட்டுகளை மட்டுமே சரி பார்க்க முடியும் . மேலும்  தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறைகளை மாற்றுவது சாத்தியம் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கம் குறித்து எதிர்கட்சிகள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 1ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
ஆனால் இதனை ஏற்று கொள்ள மறுத்த எதிர்கட்சிகள் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியவிவரம் பின்வருமாறு :
 
தேர்தல் நடைமுறை நேர்மையை இது உறுதி செய்வதால், 6 நாட்கள் மிகப் பெரிய தாமதம் இல்லை. மேலும்  விவிபிஏடி சீட்டுகளை எண்ணும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், தாமதத்தை மேலும் குறைக்கலாம்.
 
தேர்தல் ஆணையத்தின் மீது நாங்கள் எந்த அவதூறையும் கூறவில்லை. நியாயமான தேர்தல் என மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுவதற்காக 50 சதவீத விவிபிஏடி சீட்டுகளை எண்ணுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோருகிறோம்.
 
இது எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை பிரச்னை அல்ல. தேர்தல் நடைமுறை பற்றி மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் பிரச்னை.
 
அதனால் எங்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். விவிபிஏடி சீட்டுகளை எண்ணும் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடைமுறை முழுவதும் பயனற்றதாக உள்ளது.
 
இது விவிபிஏடி அறிமுகம் செய்த நோக்கத்தையே வீணடிக்கிறது. விவிபிஏடி சீட்டுகள் எண்ணும் ஆட்களையும், எண்ணப்படும் அரங்கங்களையும் அதிகரிப்பது பெரிய பிரச்னை அல்ல.
 
ஆகையால் சரிபார்ப்பு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிப்பதற்கு அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில்  நாளை விசாரணைக்கு வருகிறது.
 
ஆனாலும் 6 நாள் தேவை என்பது  சரியல்ல என்கிறார் ஸ்பெல்கோ செய்தி தளத்தின் ஆசிரியர் சவெரா.. 
 
“90 கோடி வாக்களர்களில் அதிகபட்சமான 68% ஓட்டு போடுறாங்கன்னு வச்சிக்கிட்டாலும் அதில் 50% என்பது 30.6 கோடி தான் வரும் (90 x 0.68 / 2 )
 
1989 க்கு பிறகு படிப்படியா தான்  EVM நடை முறைக்கு வருகிறது ஆனா ..அதுக்கு முன்னாடி paper counting தான்
 
EVM இல்லா காலம் 1989 விவரப்படி :
மொத்த வக்களார்கள் : 498906129
அதில் ஓட்டு போட்டவர்கள் : 309050495
ஓட்டு போட்ட சதவிதம் = 61.9%
 
ஆதாவது இன்றைய advance communication இல்லா காலத்திலே 30.9 கோடி தேர்தல் முடிவை ரெண்டே நாளில் வெளியிட்ட  தேர்தல் ஆணையம் ., 
 
ஆனால் அதே 30.6 கோடி ஓட்டை இன்னிக்கி எண்ண ஏன் ஆறு நாள் ஆகுமுன்னு சொல்ல வேண்டும் ” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ..