கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்திலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யக்கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 4900 சதுர அடி மற்றும் 3400 சதுர அடி என இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
இரண்டு சுயேட்சைகளின் ஏஜெண்டுகளை தவிர வேறு யாரையும் அனுப்பப் போவதில்லை என்றும், 9 அரசியல் கட்சிகளில் 7 அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “பிரச்சாரம் தொடங்கிய நாட்களிலிருந்து வேற்று கிரகத்தில் இருந்தீர்களா.. சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ததை தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுவந்துள்ளது, கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக உங்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை.
மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிவதை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை புளூ பிரிண்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சனம்; ட்விட்டர் கணக்குகளை முடக்கும் மோடி அரசு!