காங்கிரஸ் கூட்டணியை தடுக்கும் நோக்கத்தில் செயல்ப்படும் சந்திரசேகர ராவை பயன்படுத்த திட்டமிட்டதாக செய்திகள் வந்த நிலையில் ..
 
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-ஆவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடியை அவர் தற்போது முதன்முறையாக சந்தித்தார்.
 
அப்போது, தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட 10 மாவட்டங்களுக்கான நிதி, தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம், சில மாவட்டங்களுக்கு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கரீம்நகர் மாவட்டத்தில் ஐஐடி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சந்திரசேகர ராவ் முன்வைத்தார்.
 
இதனிடையே பாஜக, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். அவ்வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முதலாவதாக சந்தித்தார்.
 
மேலும் அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக், மாயாவதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திரசேகர ராவ் சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சந்திரசேகரராவை பாஜக பயன்படுத்தும் வியூகம் வெற்றி பெறுமா  என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்