பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

66 வயதான கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். மூத்த அரசியல்வாதியும் நிர்வாகியுமான பிரிஜ் பூஷன், 1991 மற்றும் 1999ல் கோண்டா லோக்சபா தொகுதியிலும், 2004ல் பல்ராம்பூர் தொகுதியிலும், 2009, 2014 மற்றும் 2019ல் கைசர்கஞ்சிலும் வெற்றி பெற்று, ஆறு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

ஆசிய மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் மற்றும் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் அரசாங்கத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசியல் பலம் வாய்ந்தவராக அறியப்பட்ட பிரிஜ் பூஷன் உள்நாட்டில் விளையாட்டில் அதிக அளவு செல்வாக்கு செலுத்துகிறார். இவர் தற்போது பாஜக எம்பியாகவும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாகவும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 23 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் எட்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா, “இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உள்பட 7 பேர், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 28.04.2023 அன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மே 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் கூறும்போது, “இது எங்களது வெற்றிக்கான முதல்படி. ஆனாலும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கூறும்போது, “டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தளர்வான எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன நடைபெறுகிறது என்பதை பொறுத்திருந்து கவனிப்போம். அதன் பின்னரே போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக முடிவு செய்வோம். பிரிஜ் பூஷன் சரண் சிங் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.அவர் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும், இல்லையெனில் அவர், காவல்துறையின் விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பார்” என்றார்.

இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என சானியா மிர்சா, கபில்தேவ், வீரேந்திர சேவக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், நிகத் ஜரீன், நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பிரபல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறியிருப்பது, “நமது விளையாட்டு வீரர்கள் நீதிக்காக சாலையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் கடினமாக உழைத்து, நம் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர். ஒரு தேசமாக, ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எந்தவொரு பாரபட்சமும், வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இந்த விவகாரத்தை நாம் கையாள வேண்டும். இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர் வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து பேசுகையில், “பிரதமரிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் மல்யுத்த வீரர்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்றால் ஏன் அவர்களுடன் பேசவில்லை அல்லது அவர்களை ஏன் சந்திக்கவில்லை. இந்த தேசமே அவர்களுடன் துணை நிற்கிறது. மல்யுத்த வீரர்கள் இந்த பிரச்சினைக்கு எதிராக குரல் எழுப்பியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அதை ஏன் யாருக்கும் காட்டவில்லை. இதே மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வெல்லும் போது நாம் அனைவரும் ட்வீட் செய்தோம், பெருமைப்பட்டோம். ஆனால் இன்று அவர்கள் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. இந்த மல்யுத்தப் பெண்கள் அனைவரும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளனர். பிரிஜ்பூஷண் சரண் சிங்கை அரசு ஏன் காப்பாற்றுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா கூறுகையில், “எங்களிடம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கலாம். ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், தெருவில் இறங்கிப் போராடுவது விளையாட்டுத்துறைக்கு நல்லதல்ல. இந்த வகையான எதிர்மறை விளம்பரம், போராட்டம் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல. மேலும், இது ஒழுக்கமின்மைக்குச் சமம். இந்த எதிர்மறை விளம்பரம் நாட்டுக்கு நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவரின் இந்த கருத்துக்கு மல்யுத்த வீராங்களை சாக்‌ஷி மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பி.டி உஷாவின் கருத்து எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவர் ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் என்ன ஒழுங்கீனம் செய்தோம்? நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இதை நாங்கள் செய்திருக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.