திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க கூடாது என்று தேவஸ்தான போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் நிதி உதவி அளிப்பதும், காணிக்கை அளிப்பதும், நகை, பொருட்கள், நிலங்களை வழங்குவதும் வழக்கம். இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி கோவில் இருக்கிறது.

இந்நிலையில் திருப்பதியில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நிலங்களை விற்பனை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

நிதி நிர்வாகத்தை சமாளிக்கும் வகையில், சிறு சிறு நிலங்களை விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 அசையா சொத்துக்கள், 17 வேறு சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக இருக்கும் சில நிலங்களையும் விற்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பக்தர்கள், இந்து தலைவர்களிடம் கருத்து கேட்கும்படி தேவஸ்தானம் போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் தேவஸ்தான போர்டின் இந்த செயலுக்கு நாடு முழுக்க இந்து மத தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நிலத்தை விற்பனை செய்வதை மறுபரிசீலனை செய்யும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பல இந்து மத தலைவர்கள், பாஜக தலைவர்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க கூடாது என்று தேவஸ்தான போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும். அதனால் மறு உத்தரவு வரும் வரை சொத்துக்களை விற்க கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இந்திய-சீன எல்லையில் போர் பதற்றம்… ராணுவ குவிப்பில் இரு நாடுகள்