திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பாதிப்பால் தலைமை ஜீயர் இன்று (ஜூலை 21) உயிரிழந்ததையடுத்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை 53,724 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 28,800 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 24,228 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 696 பேர் பலியாகியுள்ளனர். திருப்பதி நகரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 4,763ஆக உள்ளது.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் உரிய பரிசோதனைகளுக்கு பிறகே பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வாசிக்க: திருப்பதி கோயிலில் 20 வருட தலைமை அர்ச்சகர் கொரோனவால் உயிரிழப்பு
இந்நிலையில் ஜூலை 20 திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீனிவாச மூர்த்தி கொரோனாவிற்கு பலியானார். மேலும் தலைமை ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தலைமை ஜீயர் இன்று (ஜூலை 21) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.
முன்னதாக காளஹஸ்தியில் கொரோனா பரவல் காரணமாக ஒருவாரத்திற்கு முன்பே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மருந்து கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும். பொதுமக்கள் காலை 11 மணிக்கு பிறகு வெளியில் நடமாட வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.