நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மரணமடைந்ததாக எழுந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக் (வயது 58). இவருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள், விவேக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் இறந்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், மருத்துவத் துறையினர் விவேக்கின் மரணத்திற்கும், தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தனர். இதனிடையே, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார். அவருக்கு முறையான பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு