திமுக அரசு அமைத்த திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 திருநங்கைகளை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு, திருநங்கைகள் நல வாரியம் ஒன்று அரசால் அமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த திருநங்கைகள் நல வாரியத்துக்கு ஒரு பெண் உட்பட, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ள 55 திருநங்கைகளின் பட்டியலிலிருந்து 13 திருநங்கைகளை தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் ரியா, பியூட்டி, அனுஸ்ரீ, சத்யஸ்ரீ சர்மிளா, நிலா, ராதா, பிரியா பாபு, அருணா, மோகனாம்பாள் நாயக், சுதா, அருண் கார்த்திக், செல்வம் முனியாண்டி, வித்யா தினகரன் ஆகியோர் திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.