உலகின் வியத்தகு நிகழ்வாக, எப்படி தானாகவே உருவானதோ, அதைப்போலவே, உலகின் மிகப்பெரிய அந்த ஓசோன் துளை தானாகவே மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையகத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்தது. அந்த துளை கிரீன்லாந்து நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், “வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை முடிவுக்கு வந்தது” என்று CAMS தனது ட்விட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சார்ந்த ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்க வழிவகுத்த போதிலும், உண்மையில், COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரடங்கு முடக்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்டகால துருவங்களின் சுழற்சியால் நிகழ்ந்துள்ளது. காற்றின் தரம் குறித்த மாற்றங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தீவிர துருவ சுழற்சி முடிந்துவிட்டதால், ஓசோன் துளை மூடப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு நிகழ்வு மீண்டும் ஏற்படுமா எனத் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க: போலி ‘ஆரோக்கிய சேது’ செயலி பரவல்-இந்திய ராணுவத்தினருக்கு எச்சரிக்கை