இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைவராக இருக்க நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி கேப்டனாக வலம் வந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. 3 வகை பார்மெட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த கோலி, தனக்கு இருக்கும் பணிச்சுமை கருத்தில் கொண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எனினும், தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஒயிட்- பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என முடிவு செய்த பிசிசிஐ தேர்வுக்குழு, கோலியிடம் இருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை பறித்து, மூத்த வீரர் ரோகித் சர்மாவிடம் கொடுத்தது.
ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோகித் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடரலாம் என்று தேர்வுக்குழு தெரிவித்தது.
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன் கோலியை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிசம்பர் 8 ஆம் தேதி தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் முன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தன்னை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது குறித்து முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றும், தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் தொடருக்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். பிசிசிஐ குறித்து விராட் கோலி பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், பொதுத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக கோலி அறிவித்தார்.
விராட் கோலி 7 ஆண்டுகளாக கேப்டனாக டெஸ்ட் போட்டியில் நீடித்த நிலையில், அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இது குறித்து தற்போது வரை பிசிசிஐ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து சமீபத்தில் நிகழச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி, “எல்லாவற்றுக்கும் ஒரு காலவரையறை இருக்கும். அதனை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் கேப்டன் பதவியில் இருந்து விலகி செல்வதும், அதற்கான முடிவை சரியான தருணத்தில் எடுப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கமாகும்.
தலைவராக இருக்க ஒரு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அணியை மேலும் வெற்றிபெறச் செய்ய ஒரு பேட்ஸ்மேனாக நிறைய பங்களிக்க முடியும் என நம்புகிறேன்.
தோனி கேப்டனாக இருக்கும் போது , அவர் தலைவன் என்ற உணர்வோடு இருக்க மாட்டார். போட்டி தொடர்பான யுத்திகள், தகவல்களை தெரிவிக்கும் நபராக தான் தோனி செயல்படுவார். அணியை நான் வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்து தான் எனக்கு இந்த பதவியை தோனி வழங்கினார். இது அனைத்தும் இயற்கையாக நடந்தது.
அணியின் கேப்டனாக இல்லாத நேரத்திலும் தோனி அணியின் தேவைக்கு எல்லாவிதமான ஆலோசனையும் வழங்கினார். தோனி கேப்டனாக இருக்கும் போது அணியில் எப்படி இருந்தேனோ, அதேபோல் தான் இப்போதும் இருப்பேன்.
எப்போதும் எனது மனநிலை ஒரே மாதிரி தான் இருக்கிறது. நான் அணியின் ஒரு வீரராக இருந்தாலும் எப்போதும் கேப்டனை போல் தான் சிந்திக்கிறேன். அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று கருதுகிறேன்.
தற்போது நானும், அணியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எது தேவை என்பதை கருத்தில் கொண்டே சரியான நேரத்தில் கேப்டன் பதவியை விட்டு விலகினேன். அணிக்கு ஒரு புதிய பாதை தேவைப்பட்டது. புதிய சிந்தனைகளுடைய, ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள புதிய நபர் தேவைப்பட்டார். இதனால் தான் நான் விலகினேன். எப்போதும் போல் இந்திய அணிக்காக விளையாடி ரன் குவிப்பேன், அது தான் என் பணி” என்று தெரிவித்துள்ளார்.