இந்திய நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் ‘தமிழ் வாழ்க’, ‘வாழ்க பெரியார்’, ‘தமிழ்நாடே என் தாய்நாடு’ உள்ளிட்ட பல முழக்கங்களை எழுப்பினர்.
 
தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள், தமிழை வாழ்த்தியும் திராவிட இயக்கத் தலைவர்களை வாழ்த்தியும் கோஷமிட்டபோது பா.ஜ.கவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுப்பாகி ‘பாரத் மாதா கீ ஜே’, ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ உள்ளிட்ட கோஷங்களை பதிலுக்கு எழுப்பினர்.
 
தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாகப் பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ‘காந்திஜி வாழ்க’, ‘பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க’, ‘தந்தை பெரியார் வாழ்க’, ‘காமராஜர் வாழ்க’ என முழங்கினார்.
 
இதையடுத்து தற்காலிக சபாநாயகர், ‘உறுதிமொழி பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பது மட்டுமே குறிப்பில் ஏறும்; மற்றவை அவைக் குறிப்பில் ஏறாது’ என தெரிவித்தார்.
 
ஆனாலும் கண்டுகொள்ளாத இதற்குப் பிறகு பதவியேற்ற ஒவ்வொரு எம்.பியும் தாங்கள் பதவியேற்றவுடன் சில முழக்கங்களையும் செய்தனர்.
 
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ‘தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார்’ என்று குறிப்பிட்டார்.
 
ஜி. செல்வம் ‘வெல்க தமிழ்’ என்றும் காங்கிரஸ் உறுப்பினரான செல்லக்குமார் ‘வாழ்க தமிழ், வாழ்க பாரதம், பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக, தலைவர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக’ என்றும் குறிப்பிட்டனர்.
 
தர்மபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி. செந்தில்குமார் நாடாளுமன்றத்திற்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்.
 
பதவியேற்று முடித்ததும் ‘திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ் ஓங்குக’ என்று குறிப்பிட்டார்.
 
தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ‘வாழ்க தமிழ், வாழ்க தலைவர்,வாழ்க தளபதி’ என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் து. ரவிக்குமார் ‘வெல்க தமிழ், வாழ்க அம்பேத்கர்’ என்றும் குறிப்பிட்டனர்.
 
பொன். சிகாமணி, எஸ். ஆர். பார்த்திபன் ஆகியோர், ‘வாழ்க தமிழ், தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தளபதி போன்ற முழக்கங்களை முன்வைத்தனர்.
 
நாமக்கல் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் சின்னராஜ், ‘வாழ்க தமிழ், வாழ்க தீரன் சின்னமலை, வாழ்க காளிங்கராயன், வாழ்க கோவை செழியன்’ என முழங்கினார்.
 
கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், விஷ்ணுபிரசாத், ஆ. ராசா, திருநாவுக்கரசர், பழனி மாணிக்கம், கார்த்தி பி. சிதம்பரம் ஆகியோர் பதவியேற்பு வாசகங்களை மட்டும் கூறி பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தமிழிலேயே பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
 
ம.தி.மு.கவின் சார்பில் ஈரோடு தொகுதியில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட கணேசமூர்த்தி, ‘தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்’ என்றார்.
 
கே. சுப்பராயன், ‘லாங் லிவ் செக்யூலரிசம், லாங் லிவ் இந்தியா’ என்றும் கோயம்புத்தூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பனரான நடராஜன், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்றும் முழங்கினர்.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘வாழ்க அம்பேத்கர் பெரியார், வெல்க ஜனநாயகம் சமத்துவம்’ என்று குறிப்பிட்டார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரான ராமலிங்கம், ‘வாழ்க தமிழ், வெல்க பெரியாரின் கொள்கை’ என்றும் நாகை செல்வராஜ், ‘வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தொழிலாளர் ஒற்றுமை’ என்றும் முழங்கினர்.
 
மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ‘தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க’ என்றும் குறிப்பிட்டார். தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ‘வாழ்க தமிழ், வாழ்க பெரியார்’ என்றும் கரூர் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, ‘வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழ்’ என்றும் முழங்கினர்.
 
அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத், ‘வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்’ என முழக்கமிட்டார். இதனை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
 
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் செய்த முழக்கங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக முந்தியது பாஜகவினரை டென்சன் ஆக வைத்துள்ளது.