லடாக் மற்றும்வடக்கு சிக்கிமில் உள்ள எல்லை பகுதியில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணத்துடன் சீனா, எல்லையில் போர் விமானங்கள், படைகளை குவித்து வருகிறது. லடாக்கில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும்படி தன்நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜிஜின்பிங் தெரிவித்ததால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது. எந்த சூழல் வந்தாலும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் தயாராக உள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேலாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார். நன்றி’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா – சீனா பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் நல்ல மூடில் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீனாவுடனான எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே சமீபத்தில் எந்த போன் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: டிரம்ப் ஆதாரமற்ற தகவல்களை பதிவிட்டதாக ட்விட்டர் குற்றச்சாட்டு- டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக்கிடம் கேட்ட போது பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேசி வருகிறோம் என தெரிவித்தார்.

அதேபோல் சீனாவும் இந்தியாவும் எல்லை தொடர்பான சரியான வழிமுறைகளையும் பேச்சுவார்த்தை குழுக்களையும் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தக் கூடியதே. எனவே மூன்றாவது நாடு தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என ட்ரம்ப் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா- சீனா எல்லையில் நிலைமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் ரென்குய் கியாங் கூறும்போது, சீனா- இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதி பூண்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் முறையாக தீர்க்கும் திறன் எங்கள் இரு நாடுகளுக்கும் (இந்தியா- சீனா) உள்ளது. இரு தரப்பினரும் நிறுவப்பட்ட எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தூதரக தொடர்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர் என கூறினார்.

இந்நிலையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக்கூடாது என ஐ.நா.பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.