அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் ஆடை படத்தின் டீசர் வெளியானது முதல் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆடை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலாபால் ஆடை இன்றி வரும் டீசர் வெளியானதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெறும் 1.43 நிமிடம் ஓடக்கூடிய அந்த டீசரில் பெண்ணை காணவில்லை என்ற தவிப்பில் காவல் நிலையம் வந்த தாயிடம் கூட ஒரு நாள் தேட வேண்டியது தானே என்று கேட்கும் காவல் அதிகாரியோடு டீசர் தொடங்குகிறது. தொடர்ந்து சுதந்திரம் என்பது மற்றவர்கள் உனக்கு என்ன செய்தார்களோ அதை நீ அவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதில் இருக்கிறது என்று பிரெஞ்சு தத்துவஞானி ஜான் பால் சார்ட்ரேயின் தத்துவதோடு டீசர் நகர்கிறது.

பல அடுக்குமாடி கட்டிடத்திற்குள் போலீஸ் ஜீப் நுழைகிறது. இதையடுத்து, பின்னணியில் பாடல் கேட்கிறது. அங்கு அமலா பால் முழு நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அச்சப்படுகிறார். அதன் பிறகு தனது மானத்தை மறைக்க போராடுகிறார். அப்படியே டீசர் முடிகிறது.

ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். அவ்வாறு ஆடை இல்லாமல் அமலாபால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. ஆபாசமோ விரசமோ இல்லாமல் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த டீசர் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ஆடை டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து, அதோ அந்த பறவை போல படம் தமிழிலும், 3 மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மொத்தம் 5 படங்களுமே இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.