தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி பெட்ரோல் விலை குறைப்பு நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடந்த 28 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையை கொண்டு வந்தனர். இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன்பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் படிப்படியாக விலை உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு, சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் தமிழ்நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்” என அறிவித்தார்.
இதனையடுத்து பெட்ரோல் வரி குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் கடந்த 28 நாட்களாக தமிழ்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்தது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 102.49 ரூபாயாக இருந்தது. பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி, ரூ.3 குறைக்கப்பட்டதால் இன்று பெட்ரோல் விலை ரூ 99.47 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெண் என்பதால் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு