பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று கூறிய முதல்வர் பழனிசாமி, அதுகுறித்துத் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என பி.ஆர்.பாண்டியன் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டு வரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று (டிசம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால் சுமார் 20 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாட்களாக வடியத் தொடங்கியிருக்கிறது. 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் பழனிச்சாமி இதுவரையிலும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 867 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிவிட்டு முழுக் கணக்கெடுப்பு நடத்துவதாகத் தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில், 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கெடுப்புக்கு முன்னதாகவே இலக்கைச் சொல்லிக் கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இழப்பீடு தொகை குறித்து முதல்வர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. கார்ப்பரேட்டுகளுக்க் ஆதரவானவை என்று விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி, சட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்துத் தெளிவுபடுத்த வாய் திறக்க மறுக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிக்கும் விஷயங்கள் குறித்து சில மாற்றங்களைச் செய்து சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவாகப் பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் இதுகுறித்து முதல்வரோடு நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
எந்த இடத்திலும், பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயரதிகாரிகள் முன்னிலையிலோ, அல்லது அவர் விரும்புகிற ஊடகத்திலோ அவர் விவாதிக்கத் தயார் என்றால், நான் அவரோடு அமர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்தத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.