நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மகாரஷ்டிராவிலும் அம்மாநில அரசு விசாரணை செய்து வருகிறது. இதில் இரு மாநில அரசுகளுக்கு இடையேயும் மோதல் போக்கு தொடர்கிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது காதலி ரியா சக்ரவர்த்தியின் மீது சுஷாந்த் சிங்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பீகார் போலீசார் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் குற்றம்சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால், சிபிஐ வசம் சென்ற பீகார் வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் காவல்துறையினர் முழு அளவிலான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர், இது ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிரா அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: முதல்வர் யோகியின் ராம ராஜ்ஜியத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்..