கொரோனா குறித்த விசாரிக்க சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் கூறியுள்ளது ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் எப்படி, எங்கே முதலில் தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் இன்று வரை நிலவி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அதாவது வைரலாஜி சோதனை மையத்தில் உள்ள பி4 சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்புள்ளது.

சீனா கொரோனாவின் தோற்றம் குறித்து வேண்டுமென்றே மறைத்து இருந்தால் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இது தொடர்பான உண்மைகளை விரைவில் வெளியே கொண்டு வருவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

மேலும் வாசிக்க: சீனா, WHO, ஒபாமா அடுத்து பில்கேட்ஸ்., அமெரிக்காவில் நீளும் கொரோனா சர்ச்சை

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள். சீனா மீது இதனால் கடுமையான நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இதற்காக சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து ஐரோப்பா யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா குறித்த அடிப்படை தகவல்களை சீனா மறைத்து உள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் தோற்றம் குறித்தும், அதன் தொடக்க கால பரவல் குறித்தும் விசாரிக்க வேண்டும். ரஷ்யாவும் இதில் சில முக்கியமான உண்மைகளை மறைத்து உள்ளது. சீனா தேவையில்லாமல் இதில் அமெரிக்கா மீதெல்லாம் பழியை போட்டது தவறு.

அதேபோல் கொரோனாவிற்கு எதிரான ஐரோப்பா யூனியனின் பணிகளை இவர்கள் விமர்சனம் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன ஊடங்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது. இதனால் சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சர்வதேச அதிகாரிகள் சீனாவிற்குள் சென்று இதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐரோப்பா யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான் இது தொடர்பாக சீனாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அடுத்த மாதம் உலக சுகாதார கூட்டம் நடக்க உள்ளது. உலக சுகாதார மையத்தின் திட்டங்களை இந்த கூட்டத்தில்தான் வகுப்பார்கள். இதில் சீனாவிற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் ரீதியான நடவடிக்கை. நாம் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறோம்.

இப்போது அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கைகளை செய்ய கூடாது. இல்லையென்றால் கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்தில் கவனம் சிதறிவிடும். இது தொடர்பாக ஏன் தேவையில்லாமல் விசாரணை செய்ய வேண்டும். அதற்கான அவசியம் எதுவும் இல்லை. மக்களை பொய்களை சொல்லி தவறாக வழி நடத்துவது மிகவும் ஆபத்தானது. கொரோனா வைரஸை விட அரசியல் வைரஸ் ஆபத்தானது என்று சீனா தெரிவித்துள்ளது.