வேல் யாத்திரை நடத்த 2 முறை உயர் நீதிமன்றம் தடை விதித்தும், நவம்பர் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழக அரசு விதித்த தடையை மீறி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கியது பாஜக. இதனையடுத்து யாத்திரைக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நவம்பர் 30 ஆம் தேதி வரை யாத்திரைக்கு தடை விதித்துள்ளதாக கூறியது தமிழக அரசு.
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றாலும் திருத்தணியில் தொடங்கி மாநிலத்தின் பல பகுதிகளில் வேல் யாத்திரை நடத்தி வருகிறது பாஜக.
இதுதொடர்பாக ஏற்கனவே 4 முறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், அரசியல், மத கூட்டங்களில் 100 பேர் வரை பங்கேற்க தடை என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திட்டமிட்டபடி நவம்பர் 17 ஆம் தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். வேல் யாத்திரை டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்.
இந்த யாத்திரையில் பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால், வேல்யாத்திரைக்கு எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும்.
வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை. எனவே மதம், கட்சி கூட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முருகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மனுவுக்கும் அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற தீர்ப்பால் பாஜக கலக்கம்