சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு வருகிற ஜனவரி 1, 2019 முதல் தடை விதித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற இணையப் பக்கத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.
“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விளம்பர தூதர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கானபிரச்சாரத்தில் இவர்கள் ஈடுபடுவார்கள்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத்துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையை நாம் அடைய முடியும். பிளாஸ்டிக் பொருட்களினால், பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்ற காரணத்தினாலே அதை தடுக்க அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது” என்றார்.