சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் அதிகாலை 3.40க்கு வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் படத்துக்குப் பின் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இரண்டு தல இருக்கிறார்கள் ஒரு தல ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலிலும், மற்றொரு தல ‘பெப்பர்’ ஸ்டைலில் இளமையாக இருக்கிறார்.

வாலி, சிட்டிசன், வில்லன், அட்டகாசம், வரலாறு, பில்லா மற்றும் அசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து, எட்டு வருடங்கள் கழித்து இப்படத்தில் தல இருவேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தல அஜித் இரு வேடங்களில் நடித்தால் அது மாஸ் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடத்தில் மிகுந்துள்ளது.

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர் ஒருவர் அதை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அருமை என்று கொண்டாடுகின்றனர்.

மேலும் இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.