விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 6வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
விளைநிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் புதைமின்வடத்தில் மின்கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
 
சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இலை தழைகளை உடலில் கட்டி கொண்டு போராட்டம் நடத்தினர்.
 
மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது.
 
இந்த மின் கோபுரங்கள் விவசாய விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 17ம்தேதி முதல் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 8 இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
ஈரோடு அருகே பெருந்துறை ரோடு மூலக்கரை பகுதிகளில் நேற்று விவசாயிகளும், பெண்களும் தலையில் முக்காடு அணிந்தும், வாயில் கருப்புத்துணி கட்டியபடியும் கலந்து கொண்டனர்.
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னசரம்பட்டு கிராமத்தில், கடந்த 6 நாட்களாக கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், இரவு, பகலாக அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம், படைவீடு பேரூராட்சி சாமண்டூரில் விவசாயிகள் சங்கு ஊதி எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேசன்சாவடியில் நடந்த போராட்டத்தில் சங்கு ஊதி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் தெற்கு, வடக்கு, அவிநாசி, பல்லடம் மற்றும் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.