தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை பாராட்டும் விதமாக “இளையராஜா 75” என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில், நேற்று ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், “இசை என்பது ஒரு சிறந்த கலை. இசையமைப்பாளர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். சில சுயம்புக்கள் தண்ணீரில் உருவாகின. சில மனிதர்களில் உருவாகின. சில தானாக உருவாகின. இளையராஜா ஒரு சுயம்பு லிங்கம். இவர் ஒரு அரிதான மனிதர். இவரிடம் இருந்து ஆற்றல் வெளிவரும் போது, மிகுந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும். அன்னக்கிளி படத்தில் இருந்து இளையராஜாவை கவனித்து வருகிறேன்.

அவர் என்னை சாமி என்று அழைப்பார். அப்படியே தான் நானும் அவரை அழைப்பேன். மன்னன் படத்தில் என்னைப் பாட வைத்தார். ஏராளமான சிறந்த பாடல்களை எனக்கு அளித்துள்ளார். ஆனால் கமல்ஹாசனுக்குத் தான் மிகச் சிறந்த பாடல்களை அளித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் படத்திலிருந்து ‘நினைவோ ஒரு பறவை’, விருமாண்டி படத்திலிருந்து ‘உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை’ மற்றும் ஹேராம் படத்திலிருந்தும் பாடல்களை பாடினார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய இளையராஜா, “சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பாடல்களை இசையமைக்கையில், கமல் அடிக்கடிஸ்டுடியோவிற்கு வருவார். ஒருநாள் அவரை பாடச் சொன்னோம். அவர் பாடிய விதத்தை பார்த்ததும், அந்த பாடல் பாட வந்த பாடகரை பாட வேண்டாம் என்று அனுப்பிவிட்டோம். மிகவும் அற்புதமாக பாடினார்” என்று கூறினார்.

நடிகர் கமல் பேசும்போது,”நான் அரசியலுக்கு வருவேன் என்று முடிவெடுத்ததும் அந்த நேரத்தில் எனது சொந்த அண்ணன் சாருஹாசன்கூட, நான் அரசியலுக்கு வருவதை வரவேற்கவில்லை. என்னை ஒரு அண்ணனாக இருந்து ஊக்குவித்தவர் இளையராஜாதான்” என்று கூறினார்.