மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்கள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வேகமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது நாடு முழுவதுமே தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் 18 முதல் 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இடம் பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் விமர்சனம் செய்தன.
இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள், செலவு செய்வது நாங்கள்; இதில் பிரதமரின் படம் இடம்பெறுமா என கேள்வி எழுப்பி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தை அதிரடியாக நீக்கினர்.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் படம் இடம் பெறும் என்று மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு கொரோனா தடுப்பூசி சான்றிதழில் “எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்ற வாசகங்கள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. மோடி படம் அகற்றப்பட்டு முதல்வர் படம் இடம் பெற்றதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 3,000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீர் ராஜினாமா!