தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் மதம் சார்ந்த பிரசாரம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிக்கை அளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த அரியலூர் மாணவி லாவண்யா (வயது 17), சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம்சாட்டி, இதுதொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
மேலும் தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவி லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட மேலும் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா. 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன்.
ஆனால், என்னை அங்குள்ள சிஸ்டர் பெயர் சகாய மேரி எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள். கணக்கு வழக்கு பார்க்க கூறுவார்கள். கேட் திறப்பதில் இருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டாரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னைத் தான் செய்ய சொல்வார்.
இதுகுறித்து வார்டனிடம் கேட்டால் நீதான் பொறுப்பாக இருக்கிறாய், என கூறுவார். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன். விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது” என்று லாவண்யா கூறுகிறார். இந்த புதிய வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி, அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அக்குழுவில், சந்தியா ரே, எம்.பி – மத்திய பிரதேசம்
விஜயசாந்தி – தெலங்கானா
சித்ரா தாய் வாக் – மகாராஷ்டிரா
கீதா விவேகானந்தா – கர்நாடகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள
தஞ்சை மாவட்ட கல்வி அலுவலகம், “முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
ஜனவரி 10 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர்.
மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.