கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல் பெங்களூருவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (வயது 30). இவர் எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவின் மகள். பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரை சௌந்தர்யா மணந்தார். அவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சௌந்தர்யா வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (28.1.2022) காலை தூக்கில் தொங்கிய நிலையில், சௌந்தர்யா உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சௌந்தர்யா உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனையின் தடயவியல் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனைக்கு வந்த கர்நாடக சட்ட அமைச்சர் கே.சி.மதுசாமி, செளந்தர்யா இறப்புக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யாவின் மரணம் எடியூரப்பா குடும்பத்தினரையும், மாநில பாஜகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்தவுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.