ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஷங்கர் தயாரிப்பில் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப்பிடிப்புக்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டு பணிகள் தொடங்கின. இதனிடையே, படக்குழுவுக்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நடிகர் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்தார்.
இதனால், நடிகர் வடிவேலு நிபந்தனை எதுவுமின்றி, படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது சம்பளம் மற்றும் படத்துக்கு செலவளித்த தொகையையும் சேர்த்து ரூ.9 கோடியை திருப்பி வழங்க வேண்டும் என நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றக்கொள்ளாததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பதிலளித்த வடிவேலு, “டிசம்பர் 2016 க்குள் படத்தை முடிக்கவேண்டும். அதனால் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகாதீர்கள் என தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டனர். ஆனால் 2016 டிசம்பர் வரை படப்பிடிப்பை தொடங்காமல் இழுத்தடித்த பிறகும்கூட, தொழிலாளர்களின் நலன் கருதி நடித்துக் கொடுத்தேன்.
மேலும், என்னுடைய ஆடை வடிவமைப்பாளரை மாற்றியதோடு, என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளித்துள்ளனர். அவர்களின் தாமதத்தால் 2016-17 ஆண்டுகளில் வந்த மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போய் பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது அதோடு நடித்துக்கொடுக்க வில்லை என்றால் 2016 ஆம் ஆண்டே ஏன் அவர்கள் புகார் கொடுக்கவில்லை” என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், படத்திற்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் 24ஆம் புலிகேசி பட பிரச்சனை முடியும் வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.