பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி மதிப்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக 50,000 தரம் குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கியதால், இந்திய மக்களின் உயிர் பெரும் இடருக்கு ஆளாகியுள்ளது என்று காங்கிரஸ் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் பாஜக மோடி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. தற்போது வரை 7,23,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 20,198 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்கள் வாங்க மத்திய மோடி அரசு ஒப்புதல் அளித்தது. அந்த வென்டிலேட்டர்களில் பல தரம் குறைந்ததாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. 50,000 வென்டிலேட்டர் வாங்க ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டது. ஜூன் 23ம்தேதிவரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
இதுவரை வென்டிலேட்டர் தயாரிப்புக்கு எந்தவிதமான வெளிப்படையான டெண்டரும் கோரவில்லை. தரம்குறைந்த வென்டிலேட்டர் ரூ.1.50 லட்சத்துக்கு டெண்டரில் குறிப்பிடப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க: 8 காவலர்கள் கொடூர கொலை… பாஜக பின்னணியில் தப்பிக்கிறாரா விகாஸ் துபே…
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறுகையில், “மத்திய அரசு 50,000 வென்டிலேட்டர்கள் வாங்கப்படும் என்று கூறிய நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா 60,000 வென்டிலேட்டர்கள் ஜூன் மாத இறுதிக்குள் வாங்கப்படும் என்றார்.
பிஎம்கேர்ஸ் நிதி எங்கே போனது, வென்டேலட்டர்களை வாங்குவதில் ஏன் தாமதம்.. வெளிப்படையாக டெண்டர் ஏன் மத்திய அரசு கோரவில்லை, வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை. தரம் குறைந்த பொருட்களை வாங்கி, மக்களின் உடல்நலத்தில் ஏன் மத்திய அரசு சமரசம் செய்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்தியர்கள் வாழ்வு பெரும் இடருக்குள்ளாகியுள்ளது. பொது மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தரம்குறைந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன. மக்களின் உயிர் மீது மோடி அரசு அலட்சியமாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.