மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்கப் போகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்ச்சித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவின் பாதிப்பு படுதீவிரமாகி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஜேடியூவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. ஆனால் கொரோனா சமூக பரவல் குறித்து சிறிதும் கவலைப்படாமல் பாஜக பிரசாரங்களை தொடங்கியது சர்ச்சையாகி உள்ளது.

வீடியோ கான்ஃபரன்ஸ் நேரலை மூலமாக பீகாரின் அனைத்து பூத்துகளிலும் பாஜக தொண்டர்களிடையே அமித்ஷா, ஞாயிறன்று பேசினார். கொரோனா குறித்து சிலவற்றை அமித்ஷா பேசினாலும் மோடியின் ஆட்சிக் கால சாதனைகளையும் காங்கிரஸை விமர்சித்தும் தான் அமித்ஷா அதிகம் பேசியதாக கூறப்படுகிறது .

மேலும் வாசிக்க: பிரதமர் மோடிக்கு முக்கிய கடிதம் எழுதிய வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்

பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது; மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார் மம்தா. இதற்கான விலையை மம்தா நிச்சயமாக கொடுக்கப் போகிறார். இதே மேற்கு வங்க மக்களே மம்தா பானர்ஜியை அரசியல் அகதியாக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

குடியுரிமைச் சட்ட திருத்தம் என்பது மிகவும் முக்கியமானது. இதனை மேற்கு வங்க மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அகதிகள் என்ற காரணத்துக்காக பல பத்தாண்டுகளாக இந்த மண்ணில் நடந்த தவறுகளை இந்த குடியுரிமை சட்ட திருத்தமானது முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

மம்தா பானர்ஜியைப் போல மிக மூர்க்கமான கோபம் கொண்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெறுவதை பற்றி நினைத்து பார்க்கவில்லையா மம்தா ஜி அவர்களே! அப்படி நினைத்திருந்தால் நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும்.

இடம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர 236 ரயில்களைத் தான் மேற்கு வங்கம் அனுமதித்திருக்கிறது சுமார் 1 லட்சம் பேர் சொந்த மாநிலம் திரும்பினர். இந்த ரயிலை கொரோனா எக்ஸ்பிரஸ் ரயில் என்று மம்தா பான்ர்ஜி அழைத்தார். இந்த இடம்பெயர் தொழிலாளர்கள் தான், இந்த கொரோனா எக்ஸ்பிரஸ் தான் உங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறது என்பதையும் மம்தா பானர்ஜி புரிந்து கொள்ள வேண்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் சுகாதார திட்டங்களை ஏற்கும் போது, மம்தா பானர்ஜி ஏன் ஏற்கவில்லை. பாஜக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அந்த சுகாதாரத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம் என உறுதி அளிக்கிறேன்.

மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணிகளை நடத்த அனுமதி மறுக்கிறீர்கள். ஹெலிகாப்டர்களை தரை இறங்க அனுமதி மறுக்கிறீர்கள். இப்போது டிஜிட்டல் மூலமாக நாங்கள் பிரசாரம் செய்கிறோமே., உங்களால் தடுக்க முடிந்ததா.. வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தே தீரும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.