டிக்டாக் செல்போன் செயலிக்கு, மத்திய மோடி அரசு தடை விதித்த நிலையில் அதில் பிரபலமாக இருந்தவர்கள் தற்போது சிங்காரி, ரோபோஸோ ஆகிய 2 இந்திய மாற்று செயலிகளை நோக்கி நகர்ந்து வருகிறாரகள்.

டிக்டாக், யூசி ப்ரவுசர் உட்பட 59 சீன செயலிகள் பயனாளர்களின் டேட்டாவை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் சுமார் 12 கோடி பயனாளர்களை கொண்ட டிக்டாக் இப்போது செயல்படாமல் இருக்கும் நிலையில், அதில் பிரபலமாக இருந்தவர்கள் தற்போது இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரண்டு செயலிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதில் ஒரு செயலி ‘சிங்காரி’ (Chingari). பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக், சுமித் கோஷ் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் கடந்த ஆண்டு இந்த செயலியை உருவாக்கி இருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 லட்சம் புதிய பயனாளர்கள் சிங்காரி செயலியில் புதிதாக இணைகிறார்கள். விரைவிலேயே சிங்காரி செயலி, ஒரு கோடி பயனாளர்களை எட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

டிக்டாக் போலவே, சிங்காரி செயலியிலும் பயனாளர்கள் தங்கள் வீடியோக்களை அப்லோடு, டவுன்லோட், பிரவுசிங், ஷேர் மற்றும் தங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் வசதியும் உள்ளது. ஃபன்னி வீடியோக்கள், காதல் கருத்துக்கள், வாட்ஸ்அப்க்கான வீடியோக்கள் என பல்வேறு பிரிவுகளில் இங்கு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை- மத்திய அரசு அதிரடி

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் சிங்காரி தனது சேவையை செய்து வருகிறது.சிங்காரி செயலியின் ஒரு சிறப்பு அம்சம் வீடியோ பதிவிடுவோருக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது.

எந்த அளவுக்கு வீடியோ அதிக நபரால் பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அதை பதிவேற்றம் செய்வோருக்கு பணம் கிடைக்கும். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பாயிண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த பாயிண்ட் பணமாக மாற்றிக் கொள்ளத்தக்கது. பொழுதுபோக்கு என்ற பிரிவில், கூகுள் பிளே ஸ்டோர் கணக்குப்படி, சிங்காரி செயலி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேபோன்ற மற்றொரு வீடியோ செயலி ‘ரோபோஸோ’. ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காமெடி, வீட்டு ஆரோக்கிய குறிப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என 30 வகையான பிரிவுகளில் இதில் உள்ளடக்கம் கிடைக்கிறது. 12 இந்திய மொழிகளில் இதன் சேவை வழங்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் பொழுதுபோக்கு செயலியில் தற்போது இதற்கு நம்பர் 1 இடம் உள்ளது.

மற்றொரு பக்கம் ஹலோ ஆப் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அதே போன்ற சேவைகளை வழங்கும் ஷேர் சாட் செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. 36 மணி நேரத்தில் 15 மில்லியன் பயனாளர்கள் ஷேர் சாட் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர ஜீ5 நிறுவனமும், டிக்டாக் செயலிக்கு போட்டியாக HiPi என்பதை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.