அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 99.8% மதிப்பெண்கள் பெற்றவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 25% பேர் தேர்வெழுதவில்லை.
இதன் தேர்வு முடிவுகள் செப். 11-ம் தேதி நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றிருந்தனர். ஜேஇஇ மெயின் தேர்வில் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படிக்க முடியும்.
இந்நிலையில், மித்ரதேவ் சர்மா என்பவர் அக்டோபர் 23-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், கவுகாத்தி தேர்வு மையத்தில் சம்பந்தப்பட்ட தேர்வருக்குப் பதிலாக செப்டம்பர் 5-ம் தேதி வேறொரு மாணவர் வந்து தேர்வெழுதியதாகவும், இதற்குத் தேர்வு மையத்தில் உள்ள அதிகாரியும் உடந்தையாக இருந்ததாக மித்ரதேவ் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8% மதிப்பெண் பெற்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் காவல்துறை, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் தேர்வு எழுதிய அந்த நபர் நீல் நக்ஷத்ரா தாஸ், அவரது தந்தை மருத்துவர் ஜோதிர்மோய் தாஸ் மற்றும் ஒரு சோதனை மையத்தின் ஊழியர்களான ஹமேந்திர நாத் சர்மா, பிரஞ்சல் கலிதா மற்றும் ஹிருலால் பதக் ஆகியோர் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வர், தான் செய்த மோசடியை நண்பர் ஒருவரிடம் போனில் பகிர்ந்துள்ள ஆடியோ கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த மோசடிக்கு தேர்வு மைய இன்விஜிலேட்டர் உதவியதாகவும், தேர்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நீட் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாரு காரணமாக நிறுத்தம்