‘சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம் தன்னுடையது அல்ல; ஆனால் அதில் உள்ள கருத்து உண்மை’ என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு கடிதம் வைரலாக பரவ தொடங்கியது. அக்கடிதத்தில், “மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த பல மாதங்களாக யாரையும் சந்திக்க முடியவில்லை.

மேலும், கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். அக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் கட்சி தொடங்கும் முன்பே ரஜினி அதனை கைவிட திட்டமிட்டுள்ளார் போன்ற கருத்துகள் பரவின.

இந்நிலையில் ரஜினிகாந்த் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பதிவில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார். இது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி எப்போதும் அரசியல் பிரவேசம் குறித்து குழப்புவது போல, இன்றும் ‘அக்கடிதம் என்னுடையது அல்ல; ஆனால் அதில் உள்ள கருத்து உண்மை’ எனக் கூறியதை, அவரது படத்தின் காமெடிபோல, ‘மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது’ கேலி செய்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

9 உணர்ச்சிகள், 9 கதைகள்: நெட்ஃபிலிக்ஸில் அறிமுகமாகும் ‘நவரசா’