முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 8 பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று (18.10.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ள தகவல்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்றபோது, ஜெயலலிதா நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியான போதும், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை.
ஜெயலலிதா மரணம் சர்ச்சையானதை அடுத்து, 25.9.2017 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, 30.9.2017 முதல் விசாரணையைத் தொடங்கியது.
ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.
விசாரணை ஆணையத்தின் விசாரணை நீண்டு கொண்டே சென்றதால் 14 முறை விசாரணை ஆணையத்துக்கு பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார். இந்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:- 22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசன், நாள்பட்ட வயிற்றுபோக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டருந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு 3 நாட்கள் அதிக காய்ச்சலில் ஜெயலலிதா இருந்தால் அப்போது டாக்டர் சிவகுமாரின் ஆலோசனை படி மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தகவல்கள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.
டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன.
மருத்துவனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் எந்த ரேந்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் என சாட்சியங்கள் கூறியுள்ளன. ஆனால் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இப்படி ஜெயலலிதா இறப்பில் முரண்பட்ட விவரங்கள் உள்ளது.
விசாரணை ஆணையம் எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்த மருத்துவ அறிக்கையை கவனத்துடன் ஆய்ந்து பார்த்ததில் எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களது கருத்தாக தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது. எனவே மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்கவில்லை.
சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன் ராவ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.