ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு பட இயக்குனர்கள் பலரும் படங்கள் இயக்கி வரும் நிலையில், புதிய படமான சசிலலிதா பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். ஜெயலலிதா கேரக்டரில் நித்யாமேனன் நடிக்கும் “தி அயர்ன் லேடி” என்ற படத்தை இயக்குனர் பிரியதர்ஷனும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற படத்தை இயக்குனர் விஜய்யும் இயக்கி வருகின்றனர்.
மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக இயக்கும் முயற்சியில் இயக்குனர் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வெப்சீரீஸில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
தமிழ் இயக்குனர்களோடு தெலுங்கு இயக்குனர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர். தெலுங்கு பட உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. இவர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். “சசிகலா” என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் கே.ஜகதீஸ்வர ரெட்டி என்பவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி “சசிலலிதா” என்ற தலைப்பில் ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.