ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆதரவு அளிக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என சொல்லியது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நிலைப்பாட்டை மாற்றி பேசுவதாக அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேபோல் செப்டம்பர் 2 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்திலும் தமிழ்நாடு நிதியமைச்சர் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர், நிதியமைச்சரை அதிமுக மற்றும் பாஜக விமர்சித்து வரும் நிலையில் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 250 புதிய தள்ளு வண்டிகளை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். 2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று கூறினார்.
தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாய் ஆகவும், டீசல் வரி 31 ரூபாய் ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20% பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை; மாநில அரசுகளும் விரும்பவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100% ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயை ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?
நிலைமைக்கு ஏற்ப வரியை மாற்றம் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. தமிழகத்தில் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும் போது திமுகவின் நிலைப்பாடும் மாறும். பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டிக்குள் வர தயாராக உள்ளோம்” என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது, அதில் கலந்த கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் விரோத மோடி அரசு; போராட்டத்தில் ஒன்றிணைந்த திமுக கூட்டணிக் கட்சிகள்