சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
 
குறிப்பாக எழும்பூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம்  திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர், வில்லிவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட நகரின் உட்பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகிறது.
 
இதேபோன்று புறநகர் பகுதிகளான தரமணி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிருந்த பொது மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.
 
இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரீனா கடற்கரை,கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மழையின் போது காற்று வேகமாக வீசியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையப் பகுதிகயில் 5 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம், மகாபலிபுரம் பகுதிகளில் 4 செ.மீ மழையும், பூந்தமல்லி,தாம்பரம், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 செ.மி மழையும் பதிவாகி உள்ளது.
 
கனமழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என 3 மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, சீர்மிகு சட்டக்கல்லூரி ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் 50 முதல் 65 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.