கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன.
 
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது பிசிசிஐ. இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா எதுவும் கிடையாது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.
 
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அந்தப் போட்டியின்போது, புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, ராஞ்சி ஒரு நாள் ஆட்டத்தில் பெற்ற ஊதியத்தை வழங்குவதாக இந்திய அணியின் வீரர்கள் தெரிவித்தனர்.
 
ராணுவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்திருந்தனர். அந்தத் தொப்பியில் பிசிசிஐ இலட்சினை இருந்தது. ராணுவத்தில் கௌரவ லெஃப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கும் தோனி, சக வீரர்களுக்கு தொப்பியை வழங்கினார்.
 
இந்நிலையில் இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் முதலிடத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.
 
இந்தப் போட்டியில் பங்குபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுடைய 2019 ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்ட ஊதியத்தை புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவுள்ளார்கள்.
 
சிஎஸ்கே கேப்டனும் ராணுவத்தில் கௌரவ லெஃப்டினன்ட் கர்னல் பதவி வகிப்பவருமான தோனி இதற்கான காசோலைகளை வழங்கவுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணியை நிர்வகிக்கும் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.