சென்னை ஐஐடியில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முதன்முறையாக கொரோனா கண்டறியப்பட்டது. பரிசோதனையில் டிசம்பர் 13 ஆம் தேதி வரை 71 பேருக்கும், 14 ஆம் தேதி 33 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில், மொத்தமுள்ள 9 ஹாஸ்டல்களில் 778 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஊழியர்களோடு சேர்த்து மொத்தம் 900 பேர் ஐஐடி வளாகத்தில் உள்ளனர். இது ஒரு கொரோனா கிளஸ்டராக மாறியுள்ள போதிலும், இங்கு கட்டுப்படுத்துவதில் சிரமம் இருக்காது என்கிறார்கள் அதிகாரிகள்.
ஏனெனில், இங்கே யார் இருக்கிறார்கள், யார் எங்கே போனார்கள் என்பதற்கான விவரம் இருப்பதால், கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். கடந்த 11ம் தேதி முதலே ஐஐடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. அங்குள்ள மெஸ் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்து தான் கொரோனா பெருமளவு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை போல் இங்கும் கொரோனா பரவுகிறதா என்ற அச்சத்தில், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி; இதுவரை 104 பேர் பாதிப்பு