சென்னையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் பெய்ரூட் வெடி விபத்து ஏற்படுத்திவிடும் என்று வட சென்னை மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், தற்போது சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு காரணம், 2014 ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் எனும் எளிதில் தீப்பற்ற கூடிய ரசாயன பொருள் வைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
செவ்வாயன்று நடந்த இந்த வெடி விபத்தில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், 5000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்து கிட்டத்தட்ட 3,00,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து உலகம் முழுவதும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இதேபோன்று ஆறு ஆண்டுகளுக்கு முன் கரூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வந்த அம்மோனியம் நைட்ரேட் எனும் ரசாயன பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றி மணலியில் உள்ள கிடங்கில் வைத்துள்ளனர்.
மேலும் வாசிக்க: வெடித்து சிதறிய 2750 டன் அம்மோனியம் நைட்ரேட்… உருக்குலைந்த லெபனான் சோகம்
இதுகுறித்த தகவல் வெளியானதும், கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை அரசு ஏன் தனது ராணுவ பயன்பாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ விற்காமல் வைத்துள்ளது என்றும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்றும் வட சென்னை மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அளித்துள்ள விளக்கத்தில்,சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பொருள் வெடி பொருள் பாதுகாப்பு சட்டப்படி முறையான பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் இதை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.