ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும், நிறுவன ஊழியர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
 
தனியார் நிறுவனங்கள் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கக் கூடாது என்றும் அரசின் பொதுமக்கள் நல சேவைகளைப் பெறுவதற்காக மட்டுமே ஆதார் இணைப்பு பயன்படுத்தப்படலாம் என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
 
ஆனால் அதற்குப் பிறகும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் தொடர்ந்து ஆதார் இணைப்பைக் கோரி வருகின்றன.
 
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆதார் பயன்பாடு தொடர்பான சட்டங்களில் தேவையான திருத்தங்களை அரசு செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் ஆதார் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் அடையாள சான்று மற்றும் பிற கேஒய்சி விவரங்களுக்காக ஆதார் எண் இணைப்பைக் கட்டாயமாக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது இந்தச் சட்டம் நடவடிக்கை எடுக்க வழி செய்துள்ளது.
 
தனிநபர் விவரங்களை சேகரிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து தேவையான அனுமதியை பெற வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்படும்.
 
அனுமதியில்லாமல் யாருடைய அடையாள அட்டையோ, புகைப்படமோ வெளியானால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். தனிநபர் விவரங்களை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதமும் 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.