தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மணல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது. ஆனாலும் ஒரு சில இடங்களில் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் அள்ளப்பட்டு வரும் சூழல் தொடர்ந்தபடிதான் உள்ளது.
இவ்வாறு அள்ளப்படுகின்ற நல்ல மணலுடன் சவுடு மணல் கலப்படம் செய்யப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை கூடுதல் விலைக்கு பயன்பாட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்குன்றம் ஆரோன் உல்லாஸ் நகர், பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் திடல், நல்லூர், சோழவரம் கால்வாய் அருகே உள்ள ஆட்டந்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் ஆற்று மணல் மற்றும் சவுடு மண் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு அதே இடத்தில் கலப்படம் செய்யப்படுகிறது. பின்னர், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டிடங்கள் கட்ட தகுதியற்ற மணலை சிலிக்கான் மணலுடன் கலப்படம் செய்யும் குடோன்கள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஏராளமாக இயங்குவதாக புகார் எழுந்தது. கட்டுமானப் பணிகளுக்கு சிறிதும் தகுதியற்ற இந்தக் கலப்பட மணலை, கட்டுமானத்துக்கு ஏற்றது எனக்கூறி விற்பனை செய்வதாகவும், நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கலப்பட குடோன்கள் இயங்குவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கனிமவளத்துறை மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் அளித்தனர்.
அதில் ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக சிலிக்கான் மணல் கடத்தி வரப்பட்டு, கூவம் முகத்துவாரத்தில் அள்ளப்படும் கடற்கரை மணல், பழவேற்காடு உப்புநீர் ஏரியில் அள்ளப்படும் மணல், சவுடு மணல் ஆகியவை குடோன்களில் கொட்டி கலப்படம் செய்யப்படுகிறது என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் செங்குன்றம் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டது. அதில், செங்குன்றம் வடகரை என்ற இடத்தில் மணல் கலப்படத்தில் ஈடுபட்டிருந்த 3 குடோன்களை கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றுக்கு சீல் வைத்தனர். கலப்படத்துக்காக மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 லாரிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.