சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் நிலஅளவீடு முடிந்த இடங்களில் மரங்களை வெட்டி சாய்க்கும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது.

இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். சேலம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் இருந்து தான் 8 வழிச்சாலைக்கு எல்லை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் துவங்கி தான் 36 கி. மீ தொலைவிற்கு உத்தமசோழபுரம் வரை சாலை அமைக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு மஞ்சவாடி கணவாய் வனப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பசுமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

முன்னதாக 8 வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது, பசுமையை அழிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையை விதித்து இருந்தது. இந்தநிலையில் வனத்துறை சார்பிலும், வருவாய்த்துறை சார்பிலும் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.